நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்திற்கு தமது இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுணர்ந்த தேர்தலாக இருக்கின்றது. பல போராட்டங்களுக்கு மத்தியிலும், தியாகங்களுக்கு மத்தியிலும் தமிழ் பேசும் சமூகத்திற்காக இலங்கை, இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட இம் மாகாண சபை முறைமையினை 21 வருடங்களுக்குப் பின்பு கிழக்கு மாகாண மக்கள் நுகரத்கூடிய வாய்ப்பு கிடைத்தது. குறித்த 04 ஆண்டு கால ஆட்சியில் பல அபிவிருத்தி பணிகளும், தமிழ் பேசும் மக்களின் எண்ணக்கிடக்கைகளும் வெளிக்கொண்டுவரப்பட்டு தீர்க்கமான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளையில், மீண்டும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை கிழக்கு மக்கள் எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேர்தலாக இது அமைகின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் சிறந்த யுக்தி காரணமாக 03 தமிழ் பிரதிநிதித்துவங்களை ஆளும் அரசின் மூலம் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கௌரவப்படுத்தி மாகாண சபையின் விவசாய, மீண்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்பட்டது. இம் முறையும் அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் ஆளும் அரசு ஊடாக எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அம்பாறை மாவட்ட அரசியல் தலைமைகளுக்கும், அதே போன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இருக்கின்றது. அதற்கு முழு மூச்சாக பாடுபடவும் எமது கட்சி தயாராக இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைத்துவமான சி.சந்திரகாந்தன் அவர்களின் கீழான 04 வருட கால ஆட்சியில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்று இன ரீதியாக, மத ரீதியாக வேறுபாடுகள் பார்த்து சேவைகள் வழங்கபபடவில்லை. 03 இனங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை கிழக்கு மாகாண முதல் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார். கட்சி ரீதியான அரசியலோ, கொள்கைகளோ வேறு வேறாக இருந்தாலும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுபவர் எவ்வினத்தை சார்ந்தாலும் கிழக்கில் உள்ள அனைவருக்கும் அவரே முதலமைச்சர் என்ற வகையில் சேவையாற்ற வேண்டும். ஆனால் அண்மைக்காலங்களில் பல அரசியல் தலைமைகள் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் தம் சமூகம் சார்ந்த முதலமைச்சர் வர வேண்டும் என்ற காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. இது கிழக்கு மாகாண ஒற்றுமையனை மீண்டும் சீர்குலைத்து விடுமோ என்றே அஞ்சத்தோன்றுகின்றது.கிழக்கு மாகாணத்தில் வாக்காளர் பரம்பலினை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களோ, சிங்களவர்களோ, முஸ்லிம்களோ தனித்து ஆட்சியமைக்க முடியாது என்று தெரிந்தும், மக்கள் மத்தியில் தெளிவற்ற கருத்துக்களைக் கூறுவது உசிதமான செயற்பாடாக அமையாது. ஆனால் அரசியல் தலைமைகள் தாம் சார்ந்த சமூகங்களின் அரசியல் அதிகாரங்களை நியாயப்படுத்துவதற்கு மாகாண சபையில் அதிக ஆசனங்களை ஆளும் அரசு ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு முனைவதில் எந்த தவறும் இல்லை. அதுவே தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் இருப்பை நிலைப்படுத்துவதற்கும், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் செயற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளவர்களின் செயற்பாடு. மாறாக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் இருப்பையும் இழக்க வைத்து அரசியல் அதிகாரமற்றவர்களாக தள்ளிவிடுவார்களாக இருந்தால் பாதிக்கப்படுவது குறித்த சமூகமாகவே இருக்கும். அதற்காக மீண்டும் சுயநலமற்ற இனத்துவ அரசியலை கொண்டுவரக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.